சீர்காழி, ஜூன் 25: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் ஊராட்சி அலுவலகம் எதிரே போக்குவரத்து மிகுந்த மெயின் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள வயலில் வழிந்தோடி வருகிறது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சரிவர தண்ணீர் செல்லவில்லை. பைப் லைனில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் புதிதாக போடப்பட்ட சாலையும் பழுதாகி வருகின்றன.
உடைப்பு ஏற்பட்ட பைப்பிலிருந்து வெளியேறும் தண்ணீர் கழிவு நீருடன் கலந்து மீண்டும் உடைந்த பைப்பு வழியாக உள்ளே சென்று விடுவதால் அசுத்தமான தண்ணீரையே பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தினகரன் நாளிதழில் நேற்று வெளியானது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மங்கை மடத்தில் உடைப்பு ஏற்பட்ட பைப் லைனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பைப் லைனை சரி செய்ய வேண்டுமென செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ்க்கும், உடைந்த பைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.