சீர்காழி,ஆக.31: சீர்காழி அருகே மங்கைமடம்-திருநகரி இடையே குறுகிய சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கை மடத்திலிருந்து திருநகரி செல்லும் சாலையில் நெப்பத்தூர் தீவு பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் குறுகியதாக உள்ளது.
மேலும், தார் சாலைக்கும் மண் சாலைக்கும் இடையே ஒரு அடிவரை பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் உயரமான தார் சாலையில் இருந்து தாழ்வாக உள்ள மண் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் தாழ்வாக உள்ள மண் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் அந்த சாலையைக் கடக்கும் போது பலர் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நலன் கருதி குறுகிய சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.