சீர்காழி, ஜுன் 5: சீர்காழி அருகே பூம்புகாரில் மீனவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சௌமியா தலைமை வகித்தார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை எம்பி சுதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் முனைவர் ரெங்கலட்சுமி வரவேற்று பேசினார். தொடர்ந்து மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சௌமியா பேசியதாவது: பூம்புகாரில் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் அதிகமான வெப்பத்தால் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது. நமது ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக கடலோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் எப்பொழுது அதிகரிக்கிறது, வெப்ப அலைகளில் இருந்து என்னென்ன பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது, அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் வெப்ப அலைகள் தொடங்கும் போது பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதன் வாயிலாக மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதியைச் சார்ந்தவர்கள் காலநிலை மாற்றத்தின் போது, தங்களது உடல் நலனை காப்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். மீனவர்கள், கடலோர கிராமங்களை சார்ந்தவர்களில் இருவரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த பாதிப்பு உருவாகியுள்ளது. எனவே அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம் குறித்து சோதனை செய்ய வேண்டும். நமது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த தொற்று ஏற்கனவே வந்த ஒமிக்ரான் 2022 வகையை சார்ந்தது. அதில் சில உருமாற்றங்கள் பெற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவதன் வாயிலாக மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்க முடியும். ஏற்கனவே மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனக்கூறினார். சீர்காழி மீன்வளத்துறை துணை இயக்குனர் மோகன் குமார், பூம்புகார் நாட்டார் சம்பந்தம் மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் பூம்புகார் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமைய தலைவர் வேல்விழி நன்றி கூறினார்.
மீனவர்கள், கடலோர கிராமங்களை சார்ந்தவர்களில் இருவரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த பாதிப்பு உருவாகியுள்ளது. எனவே அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம் குறித்து சோதனை செய்ய வேண்டும்.