சீர்காழி, ஜூலை 6: குண்டும் குழியுமாகி போக்குவரததிற்கே லாயக்கற்ற நிலையில் இருக்கும் திருநன்றியூர்-ஆலவேலி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள திருநன்றியூர், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை இணைக்கின்ற சாலை கடந்த ஓராண்டாகவே குண்டும் குழியுமாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.
விவசாயம் சார்ந்த கிராமங்களையும், குக்கிராமங்களையும் இணைக்கின்ற காரணத்தினால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சாலை அருகில் புகழ்மிக்க லஷ்மிபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை சீரமைக்கப்பட்டது. விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள், நடவு எந்திரங்கள் போன்றவை அடிக்கடி சென்று வருவதால் சாலை உள்வாங்கி சேதமடைந்துள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.