சீர்காழி,நவ.8: சீர்காழி அருகே அகரப்பெருந்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கலெக்டர் மகாபாரதி கலந்துரையாடினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம், அகரப்பெருந்தோட்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி பெருந்தோட்டம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளிக்கு கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, பயனாளிக்கு உரிய முறையில் முதல் தவணைத்தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெருந்தோட்டம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின்படி செல்லனாற்றின் குறுக்கே ரூ.31 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்மூலம் செல்லனாற்றின் உப்பு நீர் புகுவதை தடுக்க வழிவகை செய்யப்படும். மேலும், இத்தடுப்பணையானது 2 நீர்ஒழுங்கியுடன் அமைக்கப்பட உள்ளது. ஒரு நீர்ஒழுங்கியானது 69மீ நீளத்திற்கு 16 கதவணைகளுடனும், மற்றொரு நீர்ஒழுங்கி 24 மீ நீளத்திற்கு 6 கதவணைகளுடனும் அமையப்பட உள்ளது. இதன்மூலம், பெருந்தோட்டம், திருவெண்காடு, அகரப்பெருந்தோட்டம், நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம், கடைக்காடு, சின்னபெருந்தோட்டம், அல்லிமேடு, நெய்தவாசல் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட 3500 ஏக்கர் பாசன பரப்பு பயனடைய உள்ளது. பின்னர், அகரப்பெருந்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி பாடப்புத்தகங்களை வாசிக்க செய்து கற்றல் திறனை ஆய்வு செய்தார்.
பெருந்தோட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமுருகன், சரவணன், பொறியாளர்கள் தெய்வநாயகி, பிருந்தா, ஊராட்சித் தலைவர் மோகனா ஜெய்சங்கர், ஆகியோர் உடன் இருந்தனர்.