சீர்காழி, செப். 3: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் 1,500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க சென்றபோது மீன்கள் குறைவாக கிடைத்ததால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வருகின்றனர். நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குறைவான எண்ணிக்கையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கும் மீன்கள் பெரிய அளவில் சிக்க வில்லை. குறைவாக சிறிய மீன்கள் அதாவது காரை மீன்கள் மட்டும் கிடைத்துள்ளது. இதனுடன் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த சில தினங்களாக கடலில் மீன்கள் குறைவாக கிடைக்கின்றன. இதற்கு காரணம் பருவநிலை மாற்றம். இழுவை வலையை பயன்படுத்தி பலர் மீன்பிடித்து சென்று விடுவதால் மீன் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பைபர் படகில் சென்று மீன் பிடிப்பவர்களுக்கு மீன்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி குறைவான மீன்கள் கிடைக்கும் போது அந்த மீன்களை விற்பனை செய்தால் செலவுக்கு கூட பணம் கிடைப்பதில்லை. இதனால் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்,’’ என்றனர்.