கோவை, நவ.28: கோவை மாநகரில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டன. இதனால், சாலைகள் சேதமடைந்து உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரங்கே கவுடர் வீதி பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. குண்டும் குழியுமாக சாலை இருப்பதாலும், தொடர்ந்து தூசிகள் பரப்பதாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையின் ஒரு பக்கம் சேதமடைந்த சாலையாக உள்ள நிலையில், மறுபக்கத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமாக இருப்பதால் வாகனங்கள் செல்லும் சாலையின் அகலம் குறைவாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.