புதுடெல்லி: சீன எல்லை பிரச்னை விவகாரம் தொடர்பாக 3வது நாளாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. அவற்றை நிராகரித்ததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்திய கட்டுப்பாட்டு பகுதிகளில், சீன படைகள் அத்துமீறி நுழைவதும், இந்திய பிராந்தியங்களை, சட்ட விரோதமாக கைப்பற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டார் எல்லை பகுதியில், சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய படைகள், உடனடியாக தடுத்து நிறுத்தின. இதனால் கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு படைகளை சேர்ந்த வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் சீன வீரர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.இந்நிலையில், எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் செயலாளர் கரின் ஜீன் பியரே கூறுகையில், ‘இந்திய – சீன எல்லையில் மோதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மோதலுக்கு பிறகு இரு தரப்பு வீரர்களும் விலகி சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்றார்.இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. தொடர்ந்து 3-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வழங்கியுள்ள இந்த நோட்டீசில், இந்திய – சீன எல்லை மோதல் குறித்த பல கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும். ‘அன்று கல்வான் தாக்குதல், இன்று தவாங்கில் தாக்குதல். ஏன் இதெல்லாம் நடக்கிறது? சீனாவுக்கு என்ன வேண்டும்? சீனாவின் எண்ணம் என்னவென்று தெரிகிறதா? இந்திய பகுதியை ஏதேனும் சீனா கைப்பற்றியுள்ளதா?’ உள்ளிட்ட பல கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அவை தலைவர் நிராகரித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மீண்டும் மக்களவை கூடியது. அப்போது, பெட்ரோல் விலை உயர்வு குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதில் திருப்தி அளிக்காததால் மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.மாநிலங்களவையில், உயர் நீதித்துறை நியமனங்களில் அரசின் தலையீடு மற்றும் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தது. மறுத்தததால் மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. …