சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், சிவில் நீதிமன்றங்களில் டிகிரி பெற்றதில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் பத்திரப்பதிவுக்கு நில உரிமையாளர் விண்ணப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. இதனால் டிகிரி பெற்ற நில உரிமையாளர்கள் அதிகமான அளவு பாதிக்கப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, சிவில் நீதிமன்றங்களில் டிகிரி பெற்ற நில உரிமையாளர்களுக்கு விதித்த காலக்கெடுவை நீக்க வேண்டும். இதற்காக அரசு ஒரு சுற்றறிக்கையை தயார் செய்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அரசு ஏற்றுக்கொண்டு, புதிய சுற்றிக்கையை தயார் செய்து அதை தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், அரசு சிறப்பு வக்கீல் யோகேஸ் கண்ணதாசன் ஆஜராகி, சிவில் நீதிமன்றங்களில் டிகிரி பெற்ற வழக்குகளுக்கு இனிமேல் காலக்கெடு இல்லை. டிகிரி பெற்ற நில உரிமையாளர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யலாம் என்று சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து அதை அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது என்று தெரிவித்தனர். அரசு தரப்பின் இந்த தகவலை பதிவு செய்த நீதிபதி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார். மேலும், சிவில் நீதிமன்றங்களில் டிகிரி பெற்ற 4 ஆண்டுகளுக்குள் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்….