ஊத்துக்கோட்டை, அக். 29: சுருட்டபள்ளி, வடதில்லை சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விநாயகர், முருகன் – வள்ளி – தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக வால்மீகேஸ்வரர் – மரகதாம்பிகா ஆகிய சுவாமி பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வால்மீகேஸ்வரருக்கு அன்னம் மற்றும் காய்கறிகள், பழவகைகளில் அபிஷேகம் செய்தனர். இதில் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதே போல் வடதில்லை பாபஹரேஸ்வரர் கோயிலில் கோயிலில் பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யதனர். பின்னர் அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் வடதில்லை, பேரிட்டிவாக்கம், உப்பரபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் ஊத்துக்கோட்டை, தண்டலம், பெரியபாளையம், காரணி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை விளக்கணாம்பூடி புதூரில் அமைந்துள்ள காந்தகிரி மலையில் எழுந்தருளிய அன்னப்பூரணி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் 10ம் ஆண்டு அன்னாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னப்பூரணி சமேத அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12 மணி அளவில் சிவபெருமானுக்கு 100 கிலோ சாதம் படைத்து காய்கறிகள், பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆர்.கே.பேட்டை சுற்று வட்டார பகுதிகள் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு படைக்கப்பட்ட அன்னத்தை பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது. அன்னாபிஷேக விழா ஏற்பாடுகள் திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரமிளா வெங்கடேசன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.