சிவகிரி, நவ.19: சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முடித்த முருகப்பெருமான் திரும்பி திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் வழியில் சிவகிரி கூடாரப்பாறையில் எழுந்தருளி, அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13ம்தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, உள்பிரகாரத்தில் சப்பர உலா வருதல், அன்னதானம் வழங்கப்பட்டு வந்தன. கந்தசஷ்டியின் 6ம்நாளான நேற்று ஏழாம் திருநாள் மண்டபம் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் சூரபதுமனையும் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகிரி விக்னேஷ் (எ) சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.