மொடக்குறிச்சி, ஆக.31: சிவகிரி பேரூராட்சி மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
துணைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். முகாமில் பொது மருத்துவம், மூலம், பௌத்தம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை, தலைவலி, முதுகு, தண்டுவடம், சிறுநீரகம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளும், பெண் மருத்துவத்தில் மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை நீர்கட்டி, உடல் பருமன், குழந்தையின்மை, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் குறித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.