சிவகாசி, ஆக.17: சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மேயர் சங்கீதாஇன்பம் தொடங்கி வைத்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். முகாமில் சிவகாசி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 480 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கண் சிகிச்சை முகாமில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாநகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள் திருப்பதி, சுரேஷ், சத்தியராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர் முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.