சிவகாசி, ஜூன் 6: சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவகாசி மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் காலை 7 மணிக்குள் காய்கறி லோடுகளை இறக்கி முடித்து சரக்கு வாகனங்கள் காய்கறி சந்தை வளாகத்திலிருந்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறின்றி வெளியேறி செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதக்கட்டணம் விதிப்பதோடு, காவல்துறை, வருவாய்துறை உதவியுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் குத்தகைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் தவிர கூடுதலாக ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டிருந்தால் மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அபராதம் வசூல் செய்யப்படும்.
அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு தினசரி வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை வாகனம் நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். மீறுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவன் கோவில் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். மாநகரின் பிரதான சாலைகளில் இருசக்கர வாகனம் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி வருகிறார். இது பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணையாளர் சரவணன் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.