சிவகாசி, செப்.15: சிவகாசி பொத்துமரத்து ஊருணியில் நேற்று 15 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. சிவகாசி பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊருணியை சுற்றி இருந்த 82 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ள மின் இணைப்புகள் துண்டிக்கும் பணிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 13 கடைகள், 2 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஊருணிக்கு வடக்குபுறம்
ஆக்கிரமிப்புகளை எடுக்க அந்த பகுதி மக்கள் நிபந்தனையுடன் கால அவகாசம் கேட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 13 ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் 2 வீடுகள் இடித்து அகற்றும் பணிகள் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி, வருவாய்த்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக ஏராளமான போலீசார் பொத்துமரத்து ஊருணியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். ஒருவார காலத்திற்கு பிறகு மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.