சிவகாசி, செப்.2: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பேருந்துநிலையத்திலிருந்து தினமும் 225 அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிவகாசி சுற்றுப்பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு சென்று வரும் வகையில் ஏராளமான மினி பஸ்களும் இங்கு தான் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பஸ் ஸ்டாண்டின் உட்புறத்தில், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளி குழந்தைகள் என பலரும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இருக்கைகள் இல்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் தரையில் அமர்ந்திருக்கும்நிலை உள்ளது.ஆகையால் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், விரிவாக்கப்பட்ட கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.