சிவகாசி, ஆக.18: சிவகாசி அருகே மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளரை, மர்மநபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே உள்ள குமிழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜ் (84). இவர், எரிச்சநத்தம்-அழகாபுரி சாலையில் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் எப்போதும் இரவில் நிறுவனத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதன்படி, நேற்று முன்தினம் இரவும் நிறுவனத்தில் தூங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் மினரல் வாட்டர் நிறுவனத்திற்குள் நுழைந்து, செளந்தரராஜை சரமாரியாக அடித்தும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்செயின், மோதிரத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து வந்த எம்.புதுப்பட்டி போலீசார், சௌந்தரராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி கண்ணன், டிஎஸ்பி சுப்பையா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக டிஎஸ்பி சுப்பையா உத்தரவின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மினரல் வாட்டர் பிளாண்ட் உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், எம்.புதுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.