சிவகாசி, செப்.1:சிவகாசி அருகே எரிச்சநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. மருத்துவ முகாமை விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்-சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சிவகாசி திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான விவேகராஜ் முன்னிலை வகித்தார். இதில், பொது மருத்துவம், சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், பல் மருத்துவம், இசிஜி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, ஆய்வகப் பரிசோதனை, அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக பார்க்கப்பட்டது.
எரிச்சநத்தம், குமிழங்குளம், கொத்தனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முகாமில் சிவகாசி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைரக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபுத்திரன், மருத்துவர் அலுவலர்கள், நகர கிராமப் பகுதி சுகாதார செவிலியர்கள், வட்டார மருத்துவ அல்லாத மேற்பார்வையாளர், இடைநிலை சுகாதார பணியாளர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர்.