சிவகாசி, ஜூன் 4: சிவகாசி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு துவங்கியது. சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுதி அடிப்படையில் 13 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட மொத்தம் 22 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். சேர்க்கைக்கான படிவங்களை மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் விஜயராணி வழங்கினார். முதல்கட்ட பொது கலந்தாய்வு நாளை (ஜூன் 4) முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வரும் போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 மாற்று சான்றிதழ், வங்கி பாஸ்புக், ஆதார், ஜாதி சான்றிதழ், பாஸ்போட் சைஸ் போட்டோ இரண்டு, முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவைகளை கொண்டு வர வேண்டும். அரசு கல்லுரியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்க உள்ள கல்வி உதவித்தொகை விவரங்கள், நான் முதல்வன் திட்டம், நாட்டுநலப்பணி திட்டம், அரசின் வகுப்பு வாரியான கல்வி உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கீழ் உதவி தொகை கிடைக்கும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.