சிவகாசி, ஜூலை 6: சிவகாசியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். சிவகாசி மாநகராட்சிக்கு வெளிவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. சிவகாசி புறவழிச்சாலையின் முதற்கட்ட பணிகள் பூவநாதபுரம்-வடமலாபுரம் வரை சுமார் 10.50 கிலோமீட்ட்டர் நீளத்திற்கு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளுக்கு வடமலாபுரம் முதல் நாரணாபுரம், சுந்தராஜபுரம், கொங்கலாபுரம், ஆலங்குளம் சாலை வழியாக பூவநாதபுரம் விலக்கு வரை சுமார் 23.00 கிலோமீட்ட்டர் நீளத்திற்கு மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கான மண் பரிசோதனை ஆய்வுகள் மற்றும் பாலம் அமைப்பதற்கான நிலத்தடி ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டப் பணிகளில் பெட்டிப் பாலம், குறுக்கு வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் அடுத்த இரு கட்டங்களுக்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தினார்.