சிவகங்கை, மார்ச் 1: சிவகங்கை மாவட்டத்தில் முன்னுரிமை துறைகளுக்கு 2025-26ம் ஆண்டில் ரூ.15,549.44 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட உள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்து பேசியதாவது: நபார்டு வங்கி ஆண்டு தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டிற்கென முன்னுரிமை துறைகளுக்கு ரூ.15549.44 கோடி அளவுக்கு வங்கிக்கடன் வழங்க அளவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூ.15549.44 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக, நபார்டு வங்கியின் சார்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூ.10815.57 கோடி மதிப்பீட்டாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.2019.14 கோடி, பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூ.2714.73 கோடி அளவிலும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். மேலும் மாவட்டத்தின் 2025-26ம் ஆண்டின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட மேலாளர்(நபார்டு) அருண்குமார், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் பிரவீன்குமார், வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.