சிவகங்கை, ஆக.24: சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டம் தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முனியராஜ், செழியன்(கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுவில் திமுக, அதிமுக, பாஜ உறுப்பினர் உள்பட்ட மொத்தம் 19 பேர் உள்ளனர்.
கூட்டத்தில், ஒன்றியக் குழுத்துணைத் தலைவர் கேசவன், 11வது வார்டு உறுப்பினர் அழகர்சாமி, 12வது வார்டு உறுப்பினர் ரமேஷ், 13வது வார்டு உறுப்பினர் வேல்முருகன், 18வது உறுப்பினர் லட்சுமி, 6வது வார்டு உறுப்பினர் அம்சவள்ளி உள்பட 6 பேர் மட்டும் கலந்து கொண்டனர். மீதமுள்ள 13 உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வரவில்லை.
இதையடுத்து போதிய கவுன்சிலர்கள் இல்லாததால் ஒன்றியக்குழு கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் முனியராஜ் அறிவித்தார். இது குறித்து ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர் கூறுகையில், ஒன்றியக்குழு உறுப்பினர்களிடையே எந்தவித முரண்பாடும் இல்லை. வேலைகளை கட்சி வேறுபாடின்றி சமமாகவே பகிர்ந்தளித்து வருகிறோம். அதனால், உறுப்பினர்கள் பங்கேற்காததில் உள்நோக்கம் எதுவும் இல்லை, என்றார்.