சிவகங்கை, ஜூன் 3: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் சேர 22 ஆயிரத்து 55பேர் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் இரண்டு சுழற்சிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல்நிலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட 11 துறைகள் உள்ளன. இதில் 10துறைகளுக்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் உள்ளன. இளங்கலையில் தமிழ், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், பொருளியல், வரலாறு மற்றும் கணினி அறிவியல், வணிக மேலாண்மை, ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகள் இரு சுழற்சிகளிலும் உள்ளன. தாவரவியல் பாடப்பிரிவு முதல் சுழற்சியில் மட்டும் உள்ளது.
இந்நிலையில் இக்கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேற்று சிறப்பு பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து பாடப்பிரிவு வாரியாக கலந்தாய்வு நடக்க உள்ளது. தற்போது முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில் மூன்று கட்ட கலந்தாய்வுகள் நடைபெறும். இக்கல்லூரியில் ஒரு கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவிற்கு மொத்தம் 1055 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான இடம் உள்ளது. ஆனால் இந்த கல்வியாண்டில் 22ஆயிரத்து 55 பேர் இக்கல்லூரி இளநிலை பிரிவில் சேர விண்ணப்பித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இக்கல்லூரியில் சேர விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக முதல் சுழற்சியில் படிக்க 15ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததையடுத்து கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. கலை அறிவியல் பிரிவில் தமிழ், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், வேளாண்மை, கணினி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. கூடுதல் கல்லூரி வேண்டும் மாணவர்கள் கூறியதாவது, பொறியியல், ஆசிரியர் பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கலை, அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் விஏஓ, தொகுதி வகை(குரூப்)தேர்வுகள் மூலம் அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் அரசு சார்பிலேயே கூடுதலான கலைக்கல்லூரிகள் உள்ளன. இங்கு கட்டணமும் குறைவு. ஆனால் விண்ணப்பிப்போரில் மிகக்குறைவான மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது. தற்போது மானாமதுரையில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல் இம்மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் உள்ள தாலுகாக்களை தேர்வு செய்து கூடுதல் கலைக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.