சிவகங்கை, ஆக.23: கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி ஆக.26 அன்று நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி, வினா போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு குறும்பட போட்டி, நாடகப்போட்டி, மாரத்தான் போட்டி மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி ஆக.26அன்று காலை 7மணியளவில் நடைபெறவுள்ளது. சிவகங்கை அரண்மனை வாசல் தொடங்கி, தொண்டி சாலையில் வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில் நிறைவடைய உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2வது பரிசு ரூ.7,000, 3வது பரிசு ரூ.5000 என ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனியே வழங்கப்படவுள்ளது.
ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 ஏழு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் மாநில அளவில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கு பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர். கூடுதல் விபரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, திட்ட மேலாளர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.