கரூர், ஆக. 26: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், கலெக்டர் பிரபுசங்கரிடம் பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாணவன் குகன் கார்த்திக்கேயன், சிலம்பு போட்டியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 12 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களை பெற்று பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கல்லூரி பிரிவில் கபடி பெண்கள் அணியினர் வெள்ளிப் பதக்கமும், பள்ளிப் பிரிவில் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான பொதுப் பிரிவு மட்டைப்பந்து போட்டிகளில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
இதே போல், கேலோ இந்தியா, தேனி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர், சீனியர் ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் மாணவி கோபிகா 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மாணவி திவானி 70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கமும், மாணவி மோனிஷா 70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கமும், மாணவன் ரகுபதி 81 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மாணவி ஷோபனா 57 கிலோ எடைப்பிரிவில் தங்கமும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற பதக்கம், சான்றிதழ்களை கலெக்டர் பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், பயிற்றுநர்கள் சபரிநாதன், மெய்ஞானமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.