போடி, ஆக.19: போடி அருகே சிலமலை கிராமத்தில் 32 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையயம் செயல்பட்டு வருகிறது. ராசிங்காபுரம், கரையாம்பட்டி, மல்லிகாபுரம், மணியம்பட்டி, சூலப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுகாதார நிலையத்தை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைவாயில் முன்பாக கழிவுநீர் தொட்டி அகன்ற அளவில் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூடி மிகவும் சேதமடைந்து தொட்டி எப்போதும் திறந்த நிலையில் உள்ளது.
எதிர்புறம் இருக்கும் கவுன்டரில் வெளிநோயாளிகள், ஓபி சீட்டு பதிவு செய்து விட்டு, உள்ளே சென்று மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் திடீரென சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் அப்பகுதியில் அமர்ந்து காத்திருந்து டாக்டரை பார்க்கும் வேண்டி உள்ளது. அதிகளவில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியில் கழிவுநீர் தொட்டி மூடி சேதமடைந்து திறந்த நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் சேதமடைந்த மூடியை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.