ஊட்டி, பிப்.5: மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் போஜன் தலைமை வகித்தார். ரவிக்குமார் வரவேற்றார். காரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பசுந்தேயிலைக்கு நியாயமான விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை நேரடியாக சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
பசுந்தேயிலை விலை நிர்ணயம் தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க விவசாயிகளை ஒன்றிணைப்பது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களை தனி பட்டா பிரிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்துவது, நீலகிரி மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள வனவிலங்குகள் தொல்லையை கட்டுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மணி நன்றி கூறினார்.