வேலூர், ஆக.27: வேலூர் மத்திய சிறையில் நடந்த சிறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும், என மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆணைக்குழு சார்பில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளில் உடனடி தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சிறைகளில் சிறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கான மக்கள் நீதிமன்றம் அனைத்து சிறைகளிலும் நேற்று அனைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்டது.
அதன்படி, வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலூர் மத்திய சிறையில், கைதிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிககு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் அருண்குமார், மாஜிஸ்திரேட்கள் திருமால், பத்மகுமாரி, பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டு விசாரணை நடத்தினர். சிறை கைதிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 54 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 22 வழக்குகள் முடிக்கப்பட்டு, 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், நல அலுவலர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.