கோவை, மே 25: கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் சமீபத்தில் பெய்த மழையால் உயர்ந்தது. அணையின் நீர் மட்டம் பாதாளத்தில் இருந்தது. நேற்று அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 80 மி.மீ மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிறுவாணிக்கு நீர் வரத்து கூடியுள்ளது. குடிநீர் எடுத்து வரும் நிலையில் இன்று அணை நீர் மட்டம் 1 அடி அதிகரித்தது. கடல் மட்ட உயர கணக்கின் படி அணை நீர் மட்டம் 868.86 மீட்டராக இருக்கிறது. அணையின் நீர் மட்டம் 878.50 மீட்டராக உயர்ந்தால் நிரம்பி வழியும் வாய்ப்புள்ளது. கனமழை நீடிப்பதால் சிறுவாணி அணைக்கு பட்டியாறு, முக்தியாறு உள்பட 32 ஓடைகளின் மூலமாக வெள்ளம் பாய்ந்து வருகிறது. சிறுவாணி அணை நீரை சுத்தம் செய்ய முன்பை விட இரு மடங்கு அதிகமாக ஆலம், படிகாரம் கலக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் தெளிவிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.