பெரம்பலூர்,ஆக.24: ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே சாலையில் வாகனங்கள் இயக்க வேண்டும் என சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரிடம் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிகளைப் பின் பற்றுவது குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம், போக்குவரத்து விதிகள் பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களை ஓட்டும் உரிமையாளரோ, டிரைவரோ கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். இதனால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும். சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்குவதால் விபத்துகளை தவிர்த்து விடலாம். சாலை விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுமே தவிர சாலை விதிகளை பின்பற்றுவதால் விபத்துகள் எங்கும் ஏற்பட்டதில்லை. எனவே பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் சாலை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்களை சாலைகளில் இயக்க வேண்டும். பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்றி பயணம் செய்ய பெற்றோர்கள் அறிவுரை கள் வழங்கி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு எச்சரிக்க வேண்டும். சாலை விதிகளைக் கடை பிடிக்காவிட்டால் அதற்குரிய அபராதக் கட்டணத்தை செலுத்த நேரிடும்.
மாணவர்கள், இளைஞர்கள் குடித்துவிட்டோ, செல்போன்களில் பேசிக் கொண்டோ வாகனங்களை ஓட்டக்கூடாது. விபத்துக்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.