செய்யாறு, ஜூன் 4: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35), லோடு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 1ம் தேதி காலை பிரம்மதேசம் அருகே உள்ள டாஸ்மாக் கடை வாசலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசில் சரண் அடைந்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த விஜய்(27), அவரது மைத்துனர் வேல்முருகன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2017ம் ஆண்டு நடந்த விஜய்யின் தந்தை பாஸ்கரின் கொலை வழக்கில் பழிவாங்க மணிகண்டன் கொலையானது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செய்யாறு அடுத்த குத்தனூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பொன்னுரங்கம்(22), வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர், பிரம்மதேசம் போலீசில் நேற்றுமுன்தினம் மாலை சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரும் அளித்த வாக்குமூலத்தில், மணிகண்டனை இவர்கள் அனைவரும் ஏரிக்கரையில் வெட்டிக்கொலை செய்து, கோணிப்பையில் கட்டி ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பாதை வழியாக கொண்டு வந்து டாஸ்மாக் கடை வாசலில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து கைதான 4 பேரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் விஜய், வேல்முருகன், பொன்னுரங்கத்தை வேலூர் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். இதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள விஜய்யின் தம்பி விக்னேஷ்(24), இவரது மைத்துனர் கோகுல் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.