மேட்டுப்பாளையம்,செப்.7: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சிட்டேபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி(60). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்து வருகிறார்.மேலும்,5 பசு மாடுகளையும் வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் மாட்டு கொட்டகைக்கு சென்று மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு தனது வீட்டில் சென்று தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் கொட்டகையின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது காட்டு யானை ஒன்று மாட்டு கொட்டகைகளை சேதப்படுத்தியது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரமாக போராடி ஒற்றைக்காட்டு யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதுகுறித்து மணி கூறுகையில்: சமீபகாலமாக சிட்டேபாளையம் பகுதியில் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.நேற்று தோட்டத்திற்குள் வந்த காட்டு யானை மாட்டு கொட்டகையினை இடித்து சேதப்படுத்தியது.காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.