வேலூர், டிச.3–: வேலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படித்த சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி வேப்பங்குப்பம் போலீசில் கடந்த 2022ல் புகார் அளித்தார். அதன்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த சதீஷ்(29) என்பவர் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தல், பாலியல் வன்கொடுமை உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது சதீஷ் என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி சிவக்குமார், சதீஷூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சந்தியா வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட சதீஷூக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.