தேனி, நவ.17:தேனி மாவட்டம், தேவராம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜ் என்ற தொத்தன் (68). இவர், கடந்தாண்டு மார்ச் 18ம் தேதி, 4 வயது சிறுமி ஒருவரை, சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து சுருளிராஜ் என்ற தொத்தனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தேனி போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கணேசன் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார். அதில், ‘சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுருளிராஜ் என்ற தொத்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.