சென்னை, நவ.10: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகேயுள்ள கொடி தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவரது மகன் பூபதி (30). இவர், செங்கல்பட்டு பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், கடந்த 17.2.2019 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஆட்டோ ஓட்டி வந்தபோது, அதே பகுதியை பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியிடம் தனது ஆட்டோவில் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, அந்த சிறுமி ‘‘நான் பேருந்தில் வருகிறேன்,’’ என்று கூறியுள்ளார்.
அதற்கு பூபதி ‘‘நானும் உங்கள் ஊர்தான்’’ என்று கூறி, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். படாளம் அடுத்த சமத்துவபுரம், கொய்யா தோப்பு அருகே சென்றபோது, திடீரென ஆட்டோவை நிறுத்திவிட்டு, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுசம்பந்தமாகசிறுமியின் உறவினர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி, பூபதியை கைது செய்த போலீசார் அவர் மீது செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, பூபதிக்கு ஆயுள் தண்டனையும் ₹15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.