திருக்கோவிலூர், நவ. 1: திருக்கோவிலூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே கிராமத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் அச்சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமையை அக்கிராமத்தை சேர்ந்த பெஞ்சமின் மகன் ஜான்பால் (35) என்பவர் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் யாரும் இல்லாத இடத்தில் அவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அந்த சிறுமி கூச்சலிடவே ஜான்பால் அங்கேயே அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், ஜான்பால் மீது போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே கடந்த 2 வருடத்துக்கு முன்பு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.