வேலூர்: சிறுமி பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம்(74). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2012ம் ஆண்டு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த சிறுமி கடைக்கு சென்று வந்த பின்னர், ராமஜெயம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், லத்தேரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விக்னேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் ராமஜெயம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.