திண்டுக்கல், மார்ச் 11: தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபாண்டி (30). இவர் கடந்த 2018ம் ஆண்டு, 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ஜெயபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளி ஜெயபாண்டிக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.