விழுப்புரம், ஜூன் 26: செஞ்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தளவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பிச்சாண்டி(60). இவர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பிச்சாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பிச்சாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிச்சாண்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.