‘‘வெயில் ஓவர்ப்பா… நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ – என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக சரி செய்யும். அவ்வளவுதான்… தாகமும் தீரணும்… உடலையும் காக்கணும்னா ஒரே வழி இளநீர். ரோட்டோரத்துல ஒரு டிரை சைக்கிள். பாக்கெட்ல ஸ்டிரா. முனை மட்டும் வெள்ளையாய் ஒரு அரிவாள், முண்டாசு போட்டு ஒரு ஆள் நிற்கிறாரா? அப்படின்னா அவர் இளநீர் வியாபாரின்னு சொல்லத்தான் வேண்டுமா? அவர்கிட்ட ஒரு இளநீர் வாங்கி சாப்பிடுங்க. என்ன விலை முன்னே, பின்னே இருக்கும். ஆனால், அதுல இருக்கிற சத்துக்களை கேட்டீங்கன்னா கூட 100 ரூபா சேர்த்து கொடுத்துட்டு வருவீங்க…! இளநீர் ஒரு சிறந்த சுத்திகரிப்பு திரவம். நம் உடலில் ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. கல்லீரல் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக திகழ்கிறது. எது சாப்பிட்டாலும் வாந்தி, பேதி ஆகுதா? இளநீர் சாப்பிடுங்க. அசதி மறையும். மயக்கம் நீங்கும். தெம்பாவே திரியலாம். அது மட்டுமா? சிறுநீரக கல்லடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற பிரச்னைகளையும் நீக்கவல்லது. பொதுவாக, கோடைக்காலங்களில் உருவாகும் டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் ஏற்படும்போது உடலில் சிறு ெகாப்பளங்கள் ஏற்படும். உடல் உஷ்ணத்தன்மையுடன் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் அதிகம் நீங்கள் குடிக்க வேண்டியது இளநீர் மட்டுமே. அதிகம் நீர் உள்ளே இறங்கும்போது, சிறுநீராக சூடு பிரிந்து உடல் இயல்பு நிலையை அடையும். மேலும், இளநீரில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் மக்னீசியம் சத்துக்குள் உள்ளன. எனவே இது நம் உடலில் இயற்கையாகவே உள்ள நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கும். அதனால்தான் வெயிலில் அதிக நேரம் விளையாடும், விளையாட்டு வீரர்கள் இளநீரை அதிகம் குடிப்பதுண்டு. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ரத்த அழுத்த நோயாளிகள், கர்ப்பிணிகள் இளநீரை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.எப்படி குடிக்கணும்?சிலர் இளநீரை வாங்கி நாள்கணக்காக வச்சு சாப்பிடுவாங்க. அதனால எந்த பிரயோஜனமும் இல்லை. மேல்தோல் சீவிய உடனே சாப்பிடணும். இல்லைனா அதுல உள்ள பொட்டாசிம், மக்னீசிய சத்துக்கள் வலுவிழக்கும். அதே நேரம் மரத்துல இருந்து இறக்கும்போதும் உடனே சீவி சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் கழித்து சாப்பிடுவது சிறந்தது.சர்பத் மாதிரி சாப்பிடலாமா?வெறும் இளநீர் சாப்பிடுறது பிடிக்கலையா? வேற லெவல்ல சாப்பிடணும்னா இளநீர் சர்பத் சாப்பிடுங்க.. செம டேஸ்டாய் இருக்கும். முதல்ல ஒரு இளநீர், ஒரு எலுமிச்சம்பழம், 4 ஸ்பூன் நன்னாரி, கொஞ்சம் ஐஸ் கட்டி எடுத்துக்குங்க. இளநீரை ஒரு டம்ளர்ல பிடிச்சு வடிகட்டுங்க. அதுல எலுமிச்சம்பழத்தை பிழிங்க… இளநீர் தேங்காயை பொடியாக நறுக்கி அதுல போடுங்க… அப்புறம் நன்னாரி சர்பத், ஐஸ் கட்டி சேர்த்து ஒரு கலக்கு கலக்குங்க… இப்ப சாப்பிட்டு பாருங்க.. இளநீரின் சுவையை விட டபுள் மடங்கு இருக்கும்.