கிருஷ்ணகிரி, ஆக. 10: அஞ்செட்டி கிராமத்தில், கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், சிறுதானியங்கள் உணவுப் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக உதவி பொது இயக்குநர் ரஞ்சய்குமார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ‘சிறுதானிய வகைகளை பாதுகாக்க, இளம் மற்றும் வளரும் தொழில் முனைவோர்கள் மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்களுடன் இணைந்து, சிறுதானிய உணவு பொருட்களை தயாரிக்க வேண்டும்,’ என்றார். ஐதராபாத் 10வது மண்டலத்தின் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் மீரா, கவுகாத்தி வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கதிர்வேல் கோவிந்தசாமி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்டட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இதனையடுத்து நடந்த சிறுதானிய உணவுப் போட்டியில், அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டு, சிறுதானியம் சார்ந்த உணவு பொருட்களான ராகி பர்பி, சிறுதானிய அல்வா, லட்டு, ராகி பூரி, களி மற்றும் முருங்கை கீரை, முடக்கத்தான் கீரை கலந்த சிறுதானிய ரொட்டிகள் போன்ற பல்வேறு உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தினர். வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஐதராபாத் முதன்மை விஞ்ஞானி பிரசாத், முதுநிலை விஞ்ஞானி மாலதி, தர்மபுரி மாவட்ட வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் ரஞ்சித், அஞ்செட்டி பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரன், விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள், மாணவிகள் என 350 பேர் பங்கேற்றனர். முன்னதாக, முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் வரவேற்றார். தொழில்நுட்ப வல்லுநர் பூமதி நன்றி கூறினார்.