நாமக்கல், மே 26: நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், காரீப் மற்றும் ராபி பருவத்தில் சராசரியாக 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியங்கள் மற்றும் குறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசால், சிறுதானிய சிறப்பு மண்டலம் 1-ஆக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஆண்டு சிறுதானியங்களின் பரப்பு, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ், குறுந்தானிய சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக உழுதல், களையெடுத்தல், பயிா்பாதுகாப்பு மருந்து தெளித்தல், பறவை விரட்டுதல் ஆகிய உழவியல் செலவினங்களுக்கு ஒரு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1600 வழங்கப்படுகிறது.
மாற்று பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு சிறுதானிய விதைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை, அறுவடை மானியம் என ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1250 அல்லது 50 சதவீத மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியுடையவர் ஆவர். சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ், முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள், உழவன் செயலி மூலமாக பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இத்திட்டத்தினை பற்றி முழு விவரம் அறிய விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.