கோவை, நவ. 16: கோவை மாநகராட்சிக்கு நடப்பு 2024-25ம் நிதியாண்டின், இரண்டாம் அரையாண்டு வரை செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரி வசூல் முகாம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த இம்முகாமில், கிழக்கு மண்டலத்தில் ரூ.78,051, மேற்கு மண்டலத்தில் ரூ.94,653, வடக்கு மண்டலத்தில் ரூ.1,77,178, தெற்கு மண்டலத்தில் ரூ.1,32,181, மத்திய மண்டலத்தில் ரூ.50,982 என ஐந்து மண்டலத்தில் மொத்தம் ரூ.5,33,045 வரி வசூலானது. அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் ரூ.1,32,181 வரி வசூலானது.
குறைந்தபட்சமாக மத்திய மண்டலத்தில் ரூ.50,982 வரி வசூலானது. இது பற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ‘‘வரி வசூலில் ஏற்கனவே கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. அதுபோல், நடப்பு 2024-25 நிதியாண்டிலும், வரி வசூல் இலக்கை அடைய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.