திருச்சி,நவ.15: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ‘குழந்தைகளுக்கான நடை’ என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்து, முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்க செயல்பாடுகளையும் துவக்கி வைத்தார்.
நேற்று நவ.14 குழந்தைகள் தினம், வரும்நவ.19 உலக குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம், நவ.20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு ‘குழந்தைகளுக்கான நடை” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தின் துவக்க விழா ஆகியன திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் மாவட்ட கலெக்டரை வரவேற்கும் வகையில் வீரவிளையாட்டான வாள் வீச்சு, சிலம்பாட்டம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன, இந்நிகழ்வுகளை தொடர்ந்து நடந்த கையெழுத்து இயக்க துவக்க விழாவில், பதாகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முதல் கையெழுத்திட்டு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி சேவா சங்கம் பள்ளி மைதானத்தில் நிறைவுற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியின் ஆடை நிறக்குறியீடு ‘நீலம்” என்பதால், கலந்து கொண்ட அனைவரும் நீல ஆடை, நீல நிற தொப்பி அணிந்து, நீல குடை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலமாக, குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, குழந்தைகளுக்காக செயல்படும் அரசு அமைப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணா்வு பேரணியில் குழந்தைகள், கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.
பேரணியின் இறுதி நிகழ்ச்சியாக திருச்சி சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளியில் வீர விளையாட்டுகள், பரத நாட்டியம், யோகா மற்றும் தமிழ்நாடு அரசினால் செயல்படக்கூடிய திட்டங்கள் குறித்த மவுன நாடகம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பங்கேற்பு சான்றுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) அமித் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி, அரசு அலுவலா்கள், போலீசார், போக்குவரத்து போலீசார், தொண்டு நிறுவன பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு உதவி மைய பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனா்.