Sunday, June 4, 2023
Home » சிறப்பான வாழ்வருளும் சிங்கப்பெருமாள்

சிறப்பான வாழ்வருளும் சிங்கப்பெருமாள்

by kannappan
Published: Last Updated on

சிங்கப்பெருமாள் கோவில் இந்தத் தலத்திற்கு சிங்கப்பெருமாள் கோயில் என்றே பெயர். மலையைக் குடைந்து பல்லவர்கள் பாணியில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் இது. நரசிம்மர் அகக்குகையான இருதயத்தில் வசிப்பதாக வேதங்கள் விவரிக்கின்றன. எனவே, இங்கு புறத்திலும் கற்குகைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார். சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்ம திருத்தலங்களில் பழமையும் தனித்துவமும்  கொண்டது இத்திருத்தலம்.சந்நதிக்கு அருகே நுழையும்போதே துளசியும், பச்சைக் கற்பூரத்தின் மணமும் மெல்ல மனதை வருடும். மெல்ல கண்மூட வைக்கும். சட்டென்று பெரிய பெருமாளைப் பார்க்க மனம் ஒன்றாய் குவியும். வலது காலை அழகாய் மடித்து, இடது காலை கீழே அழுத்தமாய் படரவிட்டு ஆஜானுபாகுவாய் ராஜ சிம்மமாய் அருள் பொழிகிறார்.உக்கிர நரசிம்மராய் அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண் அதாவது, த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார். தீபத்தை ஏற்றி, மெல்ல திருநாமம் நகர்த்தி, நெற்றிக் கண் பார்க்க சட்டென்று நம் உடல் சிலிர்த்துப் போடுகிறது. சட்டென்று நெஞ்சு நிறைகிறது. முகம் முழுதும் எப்போதும் பொங்கும் சிரிப்பாய் பிரமாண்டமாய் திகழும் பெருமாளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. கூடவே நரசிம்மம் இங்கு  ஜாபாலி  மஹரிஷியின் பொருட்டு வந்தமர்ந்த காட்சியும் மனதுக்குள் விரிகிறது…பாடலாத்ரி எனும்  இத்தலத்தில், சிவந்த மலையில் சுகாசனத்தில் சாய்ந்திருந்த ஜாபாலி மஹரிஷி நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்தார். தலை திருப்பி வானம் பார்க்க விண் வெண் சிகப்பு மென்மையாய் படர்ந்தது. மஹரிஷி குதூகலித்தார். மெல்ல கண்கள் மூடினார். எம்பெருமானைப் பார்க்க வேண்டும் என்ற தாபம் அவரைச் சூழ்ந்தது. உள்ளுக்குள் அலை அலையாய் பரவியது. பாற்கடலில் விண்ணை முட்டும் ஒரு பேரலை எழுந்து பாம்பணையின் மீது சயனித்திருந்த எம்பெருமானை காணும் தீராதாகத்தால் முட்டித் திரும்பியது. அதனின்று ஒரு துளி எகிறி பரந்தாமனின் திருவடியை தொட்டது. அந்தப் பேரழகன் பரந்தாமன் அந்தத் துளியைப் பார்த்தார். துளி உருகித் தவித்தது.ஜாபாலி மஹரிஷியின் கண்களில் நீர் வழிந்தது. அகம் மலர்ந்திருந்தது. வெகு சீக்கிரம் வருவார் என்று அவர் முகம் சொன்னது.அந்த பால பாகவதனின் பெயர் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்யகசிபு தன் பிறப்பின் ரகசியம் மறந்திருந்தான். தன்னை தேவனாக்கி தொழுது நில் என்று தொடை தட்டி அமர்ந்தான். அசுரனாய் பிறந்ததினாலே தேவனையும், தேவத் தலைவனையும் எதிர்த்தான்.‘‘நானே உனக்குத் தலைவன்… நீ வழிபட வேண்டியவன் எங்கோ உறங்கிக் கொண்டிருப்பவனல்ல, உன் எதிரே இருக்கும் இந்த ஹிரண்யன்தான் உன் வழிபாட்டிற்குரியவன்’’ என்று வழிபடாதவர்களை வகிர்ந்தான். வழிபட்டோர்களை தன் அரியணைக்கு எதிரே அமர்த்தினான். ஆனால், தன் பல்லிலேயே சிக்கிய நாராய் தன் மகனே நெருடிக் கொண்டிருப்பதால் வேதனையில் ஆழ்ந்தான்.பிரகலாதன் எப்போதும் தன் நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தான். எம்பெருமானைத் தவிர வேறு எதையும் அறியாதிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நாராயணனின் நாமத்தை உபதேசித்துக் கொண்டிருந்தான். ஹிரண்யனின் கண்கள் தீக்கங்குகளாய்க் குமுறின. ‘‘என் தந்தை வெறும்  கருவி. அதை இயக்குபவன் நாராயணன். அவரைச் சரணடையுங்கள். அவர் பாதம் பற்றிடுங்கள். தந்தை பற்றிய பயம் அறுத்திடுங்கள்’’ என்று நிதானமாய், தீர்க்கமாய் பேசினான்.இவ்வாறு பிரசாரம் செய்துகொண்டிருந்த பிரகலாதனுக்குப் பின்னால் ஒரு அசுர வீரன் கோரப்பல் காட்டிச் சிரித்தான். தந்தை அழைத்துவரச் சொன்னார் என்றான். ‘நாராயணா’ என்று சொல்லி பிரகலாதன் பின்னே சென்றான். ‘‘மூவுலகங்களும் என் பெயர் சொன்னால் குலுங்கும் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? என் குலப் பெருமை உன்னால் குன்றினால் உன்னை கொன்று போடவும் தயங்க மாட்டேன். இந்த உலகத்திற்கு அதிபதி யார்? இப்போதே சொல்!’’ என்று அவனைப் பார்த்துக் கேட்டான் ஹிரண்யன்.தந்தை எதிரே தலை தாழ்த்தி தர்மத்தை அழகுபட கூறினான், பிரகலாதன்: ‘‘நீர் எனக்கு தந்தை. நாராயணரோ நம் எல்லோருக்கும் தந்தை. பணிவாய் பரந்தாமனிடம் கேளுங்கள். சித்தம் தெளிவாகும். அது தெளிவானால் பரமபதம் நிச்சயம். அது இங்கேயே இப்பொழுதே உள்ளது. அண்டமும், இந்தப் பிண்டமும், சகஸ்ர கோடி உலகங்களும் எந்தப் புருஷனால் சிருஷ்டிக்கப் பட்டதோ, எவரால் பரிபாலிக்கப்படுகிறதோ அவரே உமக்கும், எமக்கும், அகிலத்துக்கும் தந்தை. அவரே அதிபதி.’’ ஹிரண்யன்  வெறி பிடித்ததுபோல்  அலறினான். மகனை அந்தரத்தில் தூக்கினான். அப்படியே வீசி எறிந்தான். ‘‘சாகும் தருணத்தில் பேசுவதுபோல் பேசுகிறாய். பெரிய பண்டிதன் போல் உபதேசிக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்’’ என்று அசுரர்களைப் பார்த்தான். அவர்கள் பிரகலாதனை கொத்தாய் பிடித்து தூக்கிப் போனார்கள். மதம் கொண்ட யானையை அவிழ்த்து விட்டார்கள். களிறு கட்டுக் கடங்காது பாய்ந்து வந்தது. பிரகலாதன் கண்கள் மூடினான். பாய்ந்து வந்த யானை மெல்ல நின்றது. பின்னோக்கி பதுங்கி நகர்ந்தது. மண்டியிட்டு அமர்ந்தது.தும்பிக்கையை உயரத் தூக்கி பிரகலாதனை தொழுதது. அசுரர்கள் உறைந்தார்கள். ஓடிப் போய் அரக்கத் தலைவனிடம் சொன்னார்கள். அவன் ஆவேசமானான். பிரகலாதன் கண் விழித்தான். எதிரே இருந்த யானையை ஆதூரமாய் தடவிக்கொடுத்தான். அரண்மனைக்குள் நுழைந்தான். அதற்குள் ஹிரண்யன் அகங்காரச் சிகரம் தொட்டு விட்டிருந்தான். கண்களும், முகமும் கனலாய் சிவந்திருந்தது. பிரகலாதன் மென்மையாய் பார்த்தான். ‘‘இந்த ஜகத்திற்கு அதிபதி அந்த நாராயணன் என்று சொன்னாயே, அவன் எங்குமிருக்கிறானா?’’‘‘அவர் உங்களுக்குள்ளும் இருக்கிறார்!’’‘‘அப்படியெனில் இங்கே உள்ளானா அவன்?’ என்று ஒரு கம்பத்தைக் காண்பித்தான். பிரகலாதன் சம்மதமாகத் தலையசைக்க ஹிரண்யன் நகர்ந்து, அந்த கம்பம் எனும் அசையாத மையச் சக்தியை தன் அகங்காரம் எனும் கதையால் அடிக்க, அது வெடிச்சிதறலாய், பேரிடியாய் ஒலி முகிழ்க்க, அந்த மையச் சக்தி முற்றிலும் வேறொரு ரூபத்தில் கிளர்ந்தெழுந்தது. மூவுலகமும் அதிர்ந்தன.மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் நர உடலும், சிங்க முகத்தோடும் இருந்தது அந்த மாபெரும் சக்தி. உருகிய தங்கம் போன்ற கண்களோடு ஒளிக் கூர்மையாய் பார்த்தது. சிங்க முகத்தின் பிடரி சிலிர்த்து அசைந்தது. அவர் கர்ஜிக்கும்போது  குகை போ-லுள்ள அந்த வாய் திறந்தது. கன்னங்கள் பிளந்து பெருஞ்சிரிப்போடு பெரிய பெரு-மாளாய் வானுக்கும் பூமிக்குமாய் நிமிர்ந்தார். பிரகலாதன் நெருப்பாய் நின்ற அந்த நெடுமாலை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் நீர் வழிய கைதொழுதான்.ஹிரண்யன் ராஜ சிம்மத்தின் அருகே போனான். ‘‘நீ என்ன மாயாவியா? ஜாலவித்தை காட்டுகிறாயா? உன் வித்தையை என் மகனிடம் வைத்துக் கொள்’’ என்று தன் கதையால் தொடர்ச்சியாய் தாக்கினான். சிம்மம் சிலிர்த்துத் திரும்பியது. காலை, மாலை எனும் இரண்டு வேளையுமல்லாத சந்த்யா வேளை எனும் அந்திப் பொழுதில், ஆயிரம் சூரியனும் ஒன்றாகும் பெருஞ் சிவப்பாய் திகழ்ந்த அந்த நரசிம்மர், ஹிரண்யனை அள்ளி எடுத்தார். ஞானம், அஞ்ஞானம் என்று இரு வாசலுக்கு நடுவேயுள்ள பெருவீட்டு வாசலில் வைத்து அவன் நெஞ்சைக் கிழித்தார். அவன் அகங்காரத்தை தன் சக்ராயுதத்தால் இருகூறாக்கினார்.அவன் குடலை மாலையாக்கினார். தன் கழுத்தில் தொங்க விட்டார். நரசிம்மர் அரண்மனையின் சிங்காசனத்தில் கர்ஜனையுடன் அமர்ந்தார். அரண்மனை கொதித்துக் கொண்டிருந்தது. பிரகலாதனின் அகம் குளிர்ந்து கிடந்தது. குளுமையான தோத்திரங்களால் அவரை குளிர்வித்தான். அவரும் மெல்ல உருகினார். மெல்ல அள்ளி தன் உள்ளத்தில் அமர்த்திக்கொண்டார்.ஜாபாலி மஹரிஷி நாதழுதழுக்க உச்சியைப் பார்க்க நரசிம்மர் உக்கிரராய், நெடுமாலாய் அவரெதிரே தோன்றினார். மஹரிஷி அவர் பாதத்தில் நெடுமரமாய் வீழ்ந்து பரவினார். அவர் திருவடியை தம் சிரசில் தாங்கினார். நிரந்தரமாய் அவரோடு கலந்தார்.கிழக்கு நோக்கிய கோபுர வாயிலைக் கடந்தவுடன் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில் என்பதற்கு சான்றான தீபஸ்தம்பம். அதையடுத்து பலிபீடம், துபஜஸ்தம்பம், கருடாழ்வார் சந்நதி உள்ளது. தாயார், ஆண்டாள் சந்நதிகள் கிழக்கு நோக்கியுள்ளது.   ஆண்டாள் சந்நதியை அடுத்துதனிச்சந்நதியில் விஷ்வக்சேனரும், லட்சுமி நரசிம்மரும் தெற்கு முகமாக தரிசனமளிக்கின்றனர். அடுத்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எழுந்தருளியுள்ளனர். பன்னிரு ஆழ்வார்களும் மூலவராகவும், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோர் உற்சவர்களாக அருள்கின்றனர். மேலும் உற்சவர்களாக விஷ்வக்ஸேனர்,திருக்கச்சி நம்பிகள், பிள்ளை லோகாச்சாரியார், முதலியாண்டான், கூரத்தாழ்வான் போன்றவர்கள் அருள்கின்றனர்.ஜாபாலி தரிசித்த நரசிம்மரை நாமும்  உள்ளம் சிலிர்க்க தரிசிக்கிறோம். மனமின்றி நகர்கிறோம். அருகே தாயார் அஹோபிலவல்லி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். கருணை பொழியும் கண்களில், நம் கவலைகள் மெதுவாய் உதிர்ந்து போகின்றன. எம்பெருமானின் எதிரே கருடாழ்வார் கைகூப்பி அமர்ந்துள்ளார். ஆழ்வாராதிகள் சற்று உள்ளே தனிச் சந்நதிகளில் தனித்தனியாய் வீற்றிருக்கின்றனர்.மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் எனும் திருப்பெயருடன் அருள, உற்சவர் பிரகலாத வரதன் என வணங்கப்படுகிறார்.நரசிம்மர் ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் தரித்து, வலது கையால் அபயம் காட்டி, இடது கையை தொடைமீது வைத்துக்கொண்டு, வலதுகாலை அழகாய் மடித்து, இடது காலை கீழே அழுத்தமாய் படரவிட்டு ஆஜானுபாகுவாய் ராஜசிம்மமாய் அருள்கிறார். உக்கிர நரசிம்மராக அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண், அதாவது த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார். தீபத்தின் ஒளியில் மெல்ல திருநாமம் நகர்த்தி நெற்றிக்கண் பார்க்க சட்டென்று நம் உடல் சிலிர்த்துப் போடும். பெருமாளின் திருமேனியை ஸஹஸ்ரநாம மாலையும், சாளக்ராம மாலையும் அலங்கரிக்க… திருமார்பை ‘அகலகில்லேன்‘ எனும் வாக்கியப்படி திருமகள் அலங்கரிக்கிறாள்.மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளிபடுகிறது. நரசிம்மர் கோவில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருட்பாலிக்கிறார்.திருமங்கை ஆழ்வார், தம் பெரிய திருவாய்மொழி முதல்பத்து – ஏழாவது திருமொழியில் சிங்கவேள்குன்றம் எனும் இத்தல பெருமாளைப் போற்றிய பாடல்கள், தினந்தோறும் இங்கே பாடப்பெறுகின்றன. மலையே பெருமாளின் திருமேனியாக உள்ளதால், இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷம்.நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த கோலத்தோடு இங்குள்ள புஷ்கரணியில் தம் திருமேனி நனைத்தெழுந்தார். எனவே அது சுத்த புஷ்கரணிஎன்றழைக்கப்படுகிறது.இரண்யகசிபுவை நரசிம்மர் அழித்த பிரதோஷ வேளையான சாயங்கால நேரங்களில் பிரகலாதவரதனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பல்லவர் கால குடைவரைக் கோயில் அமைப்பைக் கொண்டது இந்த ஆலயம். மூலவரான நரசிம்ம மூர்த்தியின் முன் மண்டபத்திலேயே வலப்புறம் சிறியதான இன்னொரு நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம். இத்தலத்தில் இருக்கும் அழிஞ்சல் மரத்தில் திருமணத்தடை, புத்ரபாக்யத்தடை உள்ளவர்கள், நரசிம்மரை பிரார்த்தித்து ஒரு துணியில் தொட்டில் போல் கட்டி, அதில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு நூலை எடுத்து இட்டு, மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி நெய்விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் தடைகள் விலகுகின்றனவாம்.ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியின் 44வது பாசுரத்தில் இந்த மரத்தின் சிறப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது.புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின்போது பிரகலாத வரதனை விதவிதமான திருமால் திருக்கோலங்களில் தரிசிக்கலாம். கிரி பிரதட்சணம் வரும்போதே சுதை வடிவில் திருப்பதி பெருமாள் திருவுருவை தரிசிக்கலாம்.  இந்த நரசிம்மருக்கு பானகம் கரைத்து நிவேதித்து, அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் கைகூடுவதாக ஐதீகம். இத்தலத்தின் தல விருட்சம் பாரிஜாத மரமாகும். கருவறை விமானம் பிரணவகோடி என்றழைக்கப்படுகிறது.  வைகானஸ ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுத் தகவல்கள்படி இக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாகும்.திருமணமாக, நோயிலிருந்து விடுபட, தொழிலில் மேன்மை பெற, வேலை கிடைக்க, நிம்மதி கிடைக்க ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் சிங்கபெருமாள் கோவில் மலையை ஐந்து சுற்று வலம் வந்து நரசிம்மரின் மூன்றாவது கண்ணை வழிபட்டால் குறைகள் தீர்ந்து அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.குறைகள் நீங்கிய பின் பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனையை நிறைவு செய்யலாம். திருமணமாகாதவர்களும், குழந்தை இல்லாதவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஈர இழை நூலெடுத்து நரசிம்மரை நினைத்து இந்தத் தல மரத்தின் கிளையில் கட்டி, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும்.சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்சவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திரக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகின்றன. நரசிம்மரை, மனம் குளிர வைக்கும் வகையில் அவருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். அதில் முதன்மையானதாக பானகம் உள்ளது. இங்கு வந்து பானகம் சமர்ப்பித்து, நரசிம்மரை வழிபட்டால், நாம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். சிங்கப்பெருமாள் கோயில் செல்லுங்கள். அந்த அழகிய சிங்கத்தின் சிவந்த பாதம் பற்றிடுங்கள். வற்றாத வளங்கள் பெற்றிடுங்கள். மெல்ல கிரிவலம் வந்து துவஜஸ்தம்பம் அருகே தண்டனிட்டு எழ நம் அகத்திலும் நரசிம்மர் கர்ஜிப்பார் எனில் அது மிகையில்லை. இத்தலம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது.இத்தலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் நடுவே உள்ளது.(தரிசனம் தொடரும்)ந.பரணிகுமார்…

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi