மார்த்தாண்டம், ஆக.5: உண்ணாமலைக்கடை டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிராயன்குழி பகுதியில் மீன் மார்க்கெட்டுடன் கமிஷன் கடை அமைக்க மூன்று மாதத்திற்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது அப்போது அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது இந்தப் பகுதியில் தனியார் இடத்தில் மீண்டும் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன் மார்க்கெட் அமைத்தால் கழிவுநீர் அந்த பகுதி வடிகால் வழியாக பாய்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படும்.
மேலும் துர்நாற்றம் வீசும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் சுஜின் குமார் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டை சந்தித்து மனு அளித்தார். மேலும் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. மீண்டும் மீன் மார்க்கெட் அமைப்பதை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்க கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.