திருவாரூர், ஆக. 25: சின்ன வெங்காயம் விலை குறைந்தது. ரூ.240 வரை உச்சம் தொட்ட தக்காளி 3 கிலே ரூ.100க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் விளைவிக்கப்படும் தக்காளி மற்றும் நாட்டு வெங்காயம் எனபடும் சின்ன வெங்காயம் போன்றவை பொது மக்களுக்கு பற்றாக்குறையாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தக்காளி மற்றும் சின்னவெங்காயம், சென்னை கோயம்பேடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இருந்து வரும் மொத்த காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் விளைச்சல் குறைவு மற்றும் மழையால் தக்காளி மற்றும் வெங்காய பயிர்கள் சேதம் போன்றவை காரணமாக அதன் விலை கடந்த 2 மாதம் வரையில் கடும் உச்சத்தில் இருந்து வந்தது. அதன்படி கிலோ ரூ.20, ரூ.30, ரூ.40 என்று விற்பனையாகி வந்த தக்காளியானது, திடீரென ஓரிரு நாட்களிலேயே ரூ.80, ரூ.100, ரூ.120 மற்றும் ரூ.150 வரையில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் மூலம் கூட்டுறவு துறை அங்காடிகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த விலை ஏற்றம் என்பது சற்று குறைந்தது.
ஆனால் அதன் பின்னர் மீண்டும் திடீரென தக்காளி விலை ஏறுமுகத்தில் கிலோ ரூ.180 வரையில் விற்பனையானது. இதேபோல் சின்னவெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.180 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் மட்டுமின்றி ஹோட்டல் தொழில் செய்து வருபவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக தக்காளி விலை குறைய தொடங்கிய நிலையில் நேற்றைய நிலவரப்படி திருவாரூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் வாகனங்கள் மூலம் 3 கிலோ ரூ.100 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று சின்னவெங்காயமும் கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி விலையும் சரிபாதியாக குறைந்து கிலோ ரூ.120 விலையிலும், பச்சை மிளகாய் ரூ.100லிருந்து ரூ.60 விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவு ஓட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவோர் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.