நிலக்கோட்டை, ஆக. 5: சின்னாளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த நடுப்பட்டி, சீவல்சரகு ஆகிய பகுதிகளில் குறுகிய காலத்தில் தரக்கூடிய பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் காய்கறிகள் விலை உயர்வு மற்றும் மழைக்காலம் தொடங்க உள்ளதையடுத்து சின்னாளபட்டியை அடுத்த நடுப்பட்டி பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்துள்ள பீட்ரூட்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடந்த மாதம் ரூ. 20 முதல் 25 வரை மட்டுமே விற்பனையான பீட்ரூட்கள், தக்காளி, வெங்காயம், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளோடு போட்டி போட்டுக்கொண்டு தற்போது ரூ. 40 முதல் 60 வரை விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த சரியான நேரத்தில் அறுவடை செய்து உரிய லாபத்தை பெரும் நோக்கில் விவசாயிகள் பீட்ரூட்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.