சேந்தமங்கலம், செப்.21: எருமப்பட்டி வட்டாரத்தில், சின்னவெங்காயம் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எருமப்பட்டி வட்டார பகுதியில், கடந்த வைகாசி மாத பட்டத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். கடந்த 15 நாட்களாக அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், விலை சரிந்துள்ளதால், சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி, அதனை பட்டறை அமைத்து சேமிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து நவலடிப்பட்டியை சேர்ந்த விவசாயி குமாரசாமி கூறுகையில், ‘எருமப்பட்டி வட்டாரத்தில், இந்த ஆண்டு அதிக அளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டது. கடந்த 2 மாதங்களாக அதிக காற்று, வெயில் காரணமாக வெங்காயத்தில் சத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்த சின்ன வெங்காயம் கிலோ ₹20க்கும், வெயிலில் காய வைத்த வெங்காயம் ₹25க்கும் மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.இருப்பினும், சின்ன வெங்காயத்திற்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற நோக்கத்தில், பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை சேமிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்றார்.