சின்னமனூர், மே 31: சின்னமனூர் பகுதியில் தென்மேற்கு பருவமழையையொட்டி, விளைநிலங்களை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சின்னமனூர் பகுதியில் பெரியாறு பாசனத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழைக் காலம் முன்னதாகவே துவங்கியதால், கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில், பெரியாறு அணையில் வழக்கம் போல் பாசனத்திற்காக நீர் திறக்க இருப்பதால், முன்கூட்டியே விவசாயிகள், தங்களது விளைநிலங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாசன நீர் கால்வாய்களையும் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.